நாகையை அடுத்த நாகூர் அருகே தேர்தல் பறக்கும் படை குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட 236 பவுன் எடையிலான தங்க நகைகள் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை தனி வட்டாட்டசியர் ஹரிஹரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர், நாகூர் வாஞ்சூர் சோதனைச் சாவடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, காரைக்காலிலிருந்து நாகைக்குச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தில் பயணித்த, கோவை, சாமிஅய்யர் புதுத் தெருவைச் சேர்ந்த ப. மனோகரன்(44) என்பவர், 236 பவுன் (1 கிலோ 88 கிராம்) எடையிலான தங்க ஆபரணங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. நாகையில் உள்ள ஒரு நகைக் கடைக்காக ஆர்டரின் பேரில் இந்த நகைகள் கொண்டுச் செல்லப்படுவதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததன் காரணமாக, அவரிடமிருந்த தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர். இது குறித்துத் தகவலறிந்த நாகை வருவாய்க் கோட்டாட்சியர் அ. சிவப்பிரியா, வட்டாட்சியர் பரிமளம் ஆகியோர், கைப்பற்றப்பட்ட தங்க நகைகளைப் பார்வையிட்டு, மனோகரனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.